ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மதுக்கடைகளை திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.
கொரோனா பாதிப்பில் இந்தியா இதுவரை 9000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சாராயக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் பல இடங்களில் குடிக்க முடியாமல் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதையடுத்து அஸ்ஸாம் மாநில அறிவுறுத்தலின்படி அங்கு மதுபான கடைகள் மற்றும் மொத்த விற்பனையில் ஈடுபடும் மதுபான கிடங்குகள் ஆகியவை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்போன்று மேகாலயாவில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மதுபான கடைகள் மற்றும் கிடங்குகள் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது.
மேலும் கடைக்கு வருபவர்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்றும் அஸ்ஸாம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியில் இருக்கும் மதுபான கடை ஊழியர்கள் சரக்கு வாங்க வரும் மதுப்பிரியர்களுக்கு சானிடைசரை வழங்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கம்மியாக உள்ள மாநிலங்களில் அஸ்ஸாமும் ஒன்று.
அங்கு இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.