ராஜஸ்தான் மாநிலத்தில் இஸ்லாமியர் என்பதால் கர்ப்பிணிக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால் குழந்தை இறந்த அவலம் நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் இர்ஃபான் கான். கர்ப்பினியாக இருந்த அவரது மனைவிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காத நிலையில், குழந்தை இறந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இர்ஃபான் கான், ‘வெள்ளிக்கிழமையன்று இரவு சிகிரி பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு எனது மனைவியை அழைத்துச் சென்றேன்.
அங்கே, எனது மனைவி குழந்தை பிறப்பது சிக்கலான நிலையில் இருப்பதாக கூறியதால் மறுநாள் காலையில் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
அங்கே இருந்த பெண் மருத்துவர் என்னுடைய விவரங்களை கேட்டார்.
பின்னர், அவர் நீங்கள் இஸ்லாமியர். அதனால், நீங்கள் இங்கே சிகிச்சைப் பெற முடியாது. ஜெய்ப்பூரிலுள்ள மருத்துவரைச் சென்று பாருங்கள் என்றார்.
பின்னர், மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு செல்லும்போது ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்து இறந்துவிட்டது.
மருத்துவர்களின் அலட்சியத்தால் எனது குழந்தை இறந்துவிட்டது.
விசாரணை ஆணையத்தில் எனக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதற்கான காரணத்தை மாற்றிக் கூறச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன்.
இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது வலிமிகுந்த சம்பவம்’ என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.