டெல்லி கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு – தாதா உள்ளிட்ட 3 பேர் பலி..!! நடந்தது என்ன ? (VIDEO)

டில்லியில் நீதிமன்றத்திற்குள் பிரபல தாதா ஜிதேந்திர கோகியை, வழக்கறிஞர் வேடத்தில் வந்தவர்கள் சுட்டுக்கொன்றனர். போலீசார் திருப்பி சுட்டதில் அவர்களும் உயிரிழந்தனர்.

டில்லியின் வடக்கு பகுதியில் உள்ள ரோஹிணியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அறை எண் 207 அருகே திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

இதனால், அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.அப்போது, இரு வேறு ரவுடி கும்பல் மோதிக்கொண்டது தெரியவந்தது.

வழக்கறிஞர்கள் உடையில் வந்த ஒரு கும்பல் மற்றொரு ரவுடி கும்பல் மீது தாக்குதல் நடத்தியது. அதில் உ.பி., ஹரியானா மாநிலங்களில் போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளியான ஜிதேந்தர் கோகி உயிரிழந்தார். மோதலை தடுக்க போலீசார் பதிலடியாக துப்பாக்கியால் சுட்டனர்.

சம்பவம் தொடர்பாக டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறியதாவது: டில்லியில் நீதிமன்ற அறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 ரவுடிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துளளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாதா, ஜிதேந்தர் கோகி, விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வந்த போது, போட்டி கும்பல் என்று கருதப்படும் ‘தில்லு கும்பல்’ அவரை கொல்ல சதி திட்டம் தீட்டினர்.போலீஸ் பாதுகாப்புடன் ஜிதேந்தர் கோகி அழைத்து வந்த போது, வழக்கறிஞர்கள் உடையணிந்திருந்த இரண்டு ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலுக்கு சுட்டனர். பலத்த காயமடைந்த கோகி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். போலீஸ் நடத்திய பதிலடியில், வழக்கறிஞர் உடையணிந்து வந்த 2 ரவுடிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார். நீதிமன்ற வளாகததில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே