வங்கக் கடலில் உருவாகும் புயல் சின்னம்..!

வங்கக் கடலில் அந்தமான் அருகே உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்தும், தமிழகம் மற்றும் புதுவையில் நிலவும் வானிலை குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, அந்தமான் அருகே உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறி வட மேற்கு திசையில் வடக்கு ஒடிஷாவை நோக்கி நகரும். இது தமிழகத்துக்கு வர வாய்ப்பில்லை.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை இது புயலாக வலுப்பெறும்.

இதற்கு புல் புல் என்று பெயரிடப்படும். இது ஒடிஷாவை நோக்கி நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரயில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதே சமயம், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே