கரோனா வைரஸ் தொற்று எதிரொலியாகத் தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை ஆலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் மூடப்பட்டுள்ள ஆலயங்களை உடனடியாக திறக்க வேண்டும்.
ஆலயங்களில் கரோனா வைரஸ் தொற்று நீங்குவதற்காகச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படவேண்டும்.
யாகங்கள் நடத்தப்படவேண்டும்.
திருக்கோயில்களில் பக்தர்கள் வந்து செல்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆலயங்களின் முன் தோப்புக்கரணம் போடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், உள்பட இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட 20 திருக்கோவில்கள் முன்பாக தோப்புக்கரணம் போடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளர் தங்கம் வெங்கடேஷ், மாவட்ட தலைவர் அழகர்சாமி மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதே போல, மணப்பாறையில் இந்து முன்னணி சார்பில் தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்து மத வழிபாடு ஸ்தலங்களும் மூடிய உள்ள நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில், இந்து ஆலயங்களை மீண்டும் திறக்க வழியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நகர செயலாளர் சாந்தகுமார் தலைமையில், ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவில் முன்பு சூடம் ஏற்றி, சிதர் தேங்காய் உடைத்து, சமூக இடைவெளியில் தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தையினை தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் கலைந்து சென்றனர்.