பட்டாசு தொழிலாளர்கள் மறுவாழ்வுக்கு என்ன திட்டம்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை

பட்டாசு தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியிருக்கிறது.

பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தொழிலாளர்களின் வாழ்க்கை ஏற்கனவே நலிவடைந்துள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, பட்டாசு தயாரிப்பு தொழில் நடைபெறும் மாவட்டங்களில் வேறு ஏதேனும் தொழில்களை முன்னெடுக்கும் திட்டம் உள்ளதா? மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் என்ன தொழிற்சாலைகளை அமைக்கலாம் எனவும் மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த வாசுதேவன் என்பவர் மதுரை மாவட்டத்திற்குட்பட்ட செக்காத்தூரணி, திருமங்கலம், தருமாத்தூர் ஆகிய பகுதிகளில் சிறு, சிறு பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வரும் சூழலில், முறையான பாதுகாப்பு வசதி இல்லை; அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 5 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் போதுமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை என்பதும் தெரியவருகிறது. ஆகவே விருதுநகர், சிவகாசி ஆகிய பகுதிகளில் எத்தனை பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன? அவற்றில் எவ்வளவு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்? கடந்த 10 ஆண்டுகளில் நடந்த விபத்துகள் எத்தனை? அதில் உயிரிழந்தவர்கள் மற்றும் எத்தனை பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அரசு தரப்பில் மாவட்ட வாரியாக பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

தொடர்ச்சியாக தற்போதைய சூழலில் காற்று மாசுபாடு காரணமாக பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்டாசு தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் என்ன தொழிற்சாலைகள் அமைக்கலாம் என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே