கோலி, சச்சின் இருவருக்கும் உள்ள ஒற்றுமை: மனம் திறக்கும் சேவாக்!

விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் இருவருக்கும் ஒற்றுமை உள்ளது என விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 73* (49) நீண்ட காலத்திற்குப் பிறகு மேட்ச் வின்னிங் ஸ்கோர் அடித்து அசத்தினார்.

இவர் மொத்தம் 81 டி20 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 22 முறை அவுட் ஆகாமல் களத்தில் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றிகளுக்குக் கோலியின் பங்கு எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த இந்திய அணி முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், கோலியை வெகுவாக பாராட்டியும், சச்சினுக்கும், இவருக்கும் உள்ள ஒற்றுமை குறித்தும் பேசினார்.

“விராட் கோலி ஒரு போட்டியில் சிறப்பான துவக்கத்தை அமைத்துவிட்டால் கடைசிவரை களத்தில் நீடித்து ரன்மழை பொழிவார். இதுதான் அவரின் தனித்துவமான சிறப்பு” எனத் தெரிவித்தார்.

“சரியான துவக்கம் அமைந்த பிறகு அதை எப்படி பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் என்ற நுணுக்கத்தை விராட் கோலியிடம் இருந்து இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என அஜேய் ஜடேஜா (முன்னாள் வீரர்) சமீபத்தில் பேட்டிகொடுத்திருந்தார். சச்சினும் இதையேதான் செய்வார்” எனத் தெரிவித்தார்.

“சச்சின் ஒரு இன்னிங்ஸில் சிறப்பான துவக்கம் அமைத்துவிட்டால், அதைப் பெரிய ஸ்கோராக மாற்றிவிடுவார். இப்போது விராட் கோலி இதைச் செய்து வருகிறார். சச்சின் அடிக்கடி என்னிடம் கூறும் வார்த்தை, ‘நாளை சூழ்நிலை எப்படி இருக்கும் எனத் தெரியாது’ இன்றே சிறப்பாக விளையாடிக்கொள்ள வேண்டும்’ என்பார்” எனப் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும் பேசிய சேவாக், “ரிஷப் பந்த் சரியான துவக்கத்தை அமைத்தாக வேண்டும். அவர் துவத்திலேயே அதிரடி காட்ட முயன்று தவறான ஷாட்களை ஆடுகிறார். இதைத் தவிர்த்து முதலில் நல்ல துவக்கம் அமைக்க வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே