மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் ரகசிய அறை அமைத்து விபசார தொழில் நடந்து வந்துள்ளது.
காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் இளம்பெண் மீட்கப்பட்டுள்ளார். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கடத்தல் சம்பவம்தான் அதிகரித்து வருகிறது என்றால் தற்போது, விபசார தொழிலும் அதிகரித்து வருகிறது. ஊரடங்கால் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
வறுமையில் தவிக்கும் சிலர் இப்படி விபசார தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் விடுதிகளில் வெளிமாநிலத்தை சேர்ந்த பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு ரயில்வே கேட் அருகில் தனியார் விடுதியில் விபசாரம் நடந்து வருவதாக கோவை மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, எஸ்பியின் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் நேற்றிரவு இந்த விடுதிக்கு திடீரென சென்றனர்.
இதனை எதிர்பார்க்காத விடுதி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, ஒவ்வொரு அறையாக காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது, விடுதியின் சுவற்றில் முகம் பார்க்கும் கண்ணாடி திறந்து முடும் வகையில் கதவு போன்று அமைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அந்த கண்ணாடியை அங்கிருந்து அகற்றினர். அப்போது அதற்குள் ஒரு ரகசிய அறை இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்ற காவல்துறையினரை பார்த்து அங்கிருந்த இளம்பெண்ணும், வாலிபரும் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர், விசாரணை நடத்தினர்.
அப்போது, வறுமையின் காரணமாக இந்த தொழிலில் ஈடுபட்டுவதாக இளம்பெண் கூறியுள்ளார். இதையடுத்து, ரகசிய அறை அமைத்து விபசாரம் நடத்திய வேலூரை சேர்ந்த மகேந்திரன் ( 46), விடுதி ஊழியர் கணேசன் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, 22 வயதுடைய பெங்களூரு பெண்ணை மீட்ட காவல்துறையினர், கோவையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விடுதியை குத்தகைக்கு நடத்தி வரும் மகேந்திரன் மற்றும் ஊழியரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.