ஹட்சன் பால் பண்ணையில் வாயு கசிவு – 14 பேர் மயக்கம்; 3 பேர் கவலைக்கிடம்

ஆந்திராவில் உள்ள தனியார் பால் பண்ணையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 14 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பூத்தலபட்டு அருகே உள்ள பண்டப்பள்ளியில் தனியார் பால் பதபடுத்தும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

நேற்றிரவு வழக்கம்போல் அங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென தொழிற்சாலையில் சிலிண்டர்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அமோனியா வாயு கசிந்தது.

இதனால் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக சித்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

அவர்களில் இரண்டு பேருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தகவல் அறிந்து சித்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா, மருத்துவரிடம் சிகிச்சை பெறும் தொழிலாளர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே