அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மாணவர் காவல் நிலையத்தில் புகார்!

செருப்பைக் கழற்றச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது பழங்குடியின மாணவர் மசினகுடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், கோவில் வளர்ப்பு யானைகளுக்கு இன்று முதல் புத்துணர்வு முகாம் தொடங்க உள்ளது.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது, அங்கு கூடியிருந்த பழங்குடியின மாணவர் ஒருவரை டேய் இங்க வாடா என்று அழைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், என் காலின் செருப்பைக் கழற்றிவிடு என்று கூறினார்.

உடனே அந்தச் சிறுவன் குனிந்து செருப்பைக் கழற்றிவிட்டான்.

அப்போது திண்டுக்கல் சீனிவாசன் உதவியாளர், புகைப்படம் எடுக்காதீர்கள் என்று சைகை ஊடகவியலாளர்களிடம் செய்கை செய்தார்.

மற்றொரு உதவியாளர், புகைப்படம் எடுப்பதை மறைக்கும் வகையில் போய் நின்றார்.

இருப்பினும், திண்டுக்கல் சீனிவாசனின் சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்றச் சொன்ன நிகழ்வு முழுவதும் வீடியோவாக பதிவாகியிருந்தது.

அமைச்சரின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

அதனையடுத்து விளக்கமளித்த திண்டுக்கல் சீனிவாசன், என்னுடைய பேரனாக நினைத்துதான் செருப்பைக் கழற்றிவிடச் சொன்னேன்.

யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மாணவர், நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே