கேரள தேர்தலில் பாஜகவுக்கு உதவியது ஏன்?- காங்கிரஸ் தலைமை தெளிவுபடுத்த வேண்டும்: பினராயி விஜயன் கடும் சாடல்

கேரள தேர்தலில் பாஜகவுக்கு உதவியது ஏன் என்பதை காங்கிரஸ் தலைமை விளக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஓ.ராஜகோபால் தொலைக்காட்சி ஒன்று அளித்துள்ள பேட்டியில் இதற்கு முன்பு காங்கிரஸுடன் இணைந்து இடதுசாரி கூட்டணியை தோற்கடிக்க தேர்தல் வியூகம் வகுத்தாக கூறியுள்ளார்

அவர் கூறுகையில் ‘‘ தேர்தல் சமயத்தில் குறிப்பிட்ட சில தொகுதியில் ரகசிய கூட்டணி அமைப்பது கட்சிகளின் வழக்கம் தான். பாஜக சில தொகுதிகளில் இடதுசாரி கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவும், பாஜக வேட்பாளர் கூடுதல் வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காகவும் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் பரஸ்பரம் சில இணைக்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இது வெளிப்படையானது தான். இதனை கூட்டணியாக கருத முடியாது. அதேசமயம் ஓட்டு சிதறாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கை மட்டுமே. இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தியுள்ளாம். கடந்த தேர்தல்களில் ஒத்தபாலம் மற்றும் மஞ்சேஸ்வரம் தொகுதிகளில் பாஜகவுக்கு பலன் கொடுத்துள்ளது. இடதுசாரி கூட்டணி தோல்வி அடைந்துள்ளது’’ எனக் கூறினார்.

இதனை கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘கேரளாவின் மூத்த பாஜக தலைவரும் அக்கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏவும் கேரள தேர்தலில் காங்கிரஸ்- முஸ்லிம் லீக்- பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார். கேரள அளவில் அமைந்துள்ள இந்த புனிதமற்ற கூட்டணியை அவர் வெளிப்படுத்தியுள்ளார், விரும்புகிறார். காங்கிரஸ் தலைமையும், முஸ்லிம் லீக்கும் பாஜகவுக்கு ஏன் உதவியது என்பதை அதிகாரபூர்வமாக தெளிவுபடுத்த வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே