சசிகலா வசனம் : ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்வோம் – வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

தர்பார் படத்தில் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்காவிட்டால் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்படும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும்  வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் காவல்துறை உயரதிகாரியான ரஜினி இடம்பெறும் ஜெயில் தொடர்பான காட்சி ஒன்றில் சசிகலாவை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக, காசு கொடுத்தா ஷாப்பிங் கூட போகலாம் என்ற வசனம் இடம்பெற்றிருந்தது.

மற்றொரு காட்சியும் சசிகலாவை விமர்சிக்கும் வகையில் இருக்க, அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பும் தெரிவித்திருந்தார்.

இந்த 2 விஷயங்கள் இன்றைய அரசியல் களத்தில் தீயாக உலாவ ஆரம்பித்தன.

இந்நிலையில் வசனத்தை நீக்க வேண்டுமென சசிகலா தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அவரது தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியிருப்பதாவது:

தர்பார் திரைப்படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சிக்கும் வசனங்கள் இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சர் ஜெயக்குமாரும் பேட்டி கொடுத்திருக்கிறார்.

சசிகலா சிறையிலிருந்து வெளியே சென்றார் என்று அதிகாரி வினய் குமார் அறிக்கையின் எந்த இடத்திலும் இல்லை.

சசிகலா நடந்துசெல்வது போன்று வெளியான வீடியோ, அவர் சிறையிலிருந்து வழக்கறிஞர்களை சந்திக்க வரும்போது எடுக்கப்பட்டது என்று தேதியோடு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோலவே, சசிகலா சிறையிலிருந்து ஷாப்பிங்கிற்காக வெளியே சென்றார் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை என்று ரூபாவும் சொல்லி இருக்கிறார்.

உண்மை இப்படி இருக்க இதுபோன்ற வசனம் இடம்பெற்றது கண்டிக்கத்தக்கது. அப்படிப்பட்ட வசனம் இருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும்.

அப்படி செய்யாவிட்டால் நடிகர் ரஜினிகாந்த், அந்த வசனத்தைப் பேசிய பிற நடிகர்கள், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் ஆகியோர் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று கூறி இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே