அதிமுகவினரின் தேர்தல் பணிகளை ஒடுக்கிட திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கையில் எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமாக சென்னை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்பட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை பணி செய்ய விடாமல் தடுக்க இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர், இதனையெல்லாம் அதிமுக எதிர்கொள்ளும், நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிப்போம். லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிமுக பயப்படாது” என்று தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அதனை திசை திருப்ப திமுக இதுபோன்ற பொய்யான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், திமுக ஆட்சி அமைத்தது முதல் காழ்ப்புணர்ச்சியோடு அரசியலில் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறினார்.
மேலும், காவல்துறையை வைத்து அதிமுகவினரையும், முன்னாள் அமைச்சர்களையும் பயமுறுத்திவிடலாம் என்று நினைக்கலாம். அது ஒரு போதும் நடக்காது என்றும் குறிப்பிட்டார்.