தமிழக சட்டப்பேரவையில் CAA-வுக்கு எதிராக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

CAA தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அவ்வாறு இருக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர், இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் அழைத்து பேசியிருப்பது ஏனென்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்புமில்லை என மத்திய அரசு தெரிவித்திருப்பதை, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் எடுத்துரைத்ததாகக் கூறினார். 

இஸ்லாமிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குறிப்பிட்டார்.

ஏற்கனவே விவாதிக்கப்பட்ட பொருள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பது தேவையா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே