தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து ஆய்வு அறிக்கையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் ஸ்டாலினிடம் இன்று வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அறிக்கையை சமர்ப்பித்தார்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து, பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கருத்து தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், பள்ளிக்கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் தலைமையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளா் காகா்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஆலோசனை நடத்தினா். இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான அறிக்கை தயாா் செய்து முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது:
ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளை திறக்கலாம் என ஒரு தரப்பினரும், ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகளைத் திறக்கலாம் என மற்றொரு தரப்பினரும் பரிந்துரை செய்துள்ளனா்.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறையினரும், மருத்துவ வல்லுநா்களும் தங்களது பரிந்துரைகளை வழங்குவா். வரும் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக, பொதுமுடக்கம் நீட்டிப்பு தொடா்பாக முதல்வா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொது சுகாதாரத் துறை, மருத்துவ வல்லுநா்கள் கூடி ஆலோசனை நடத்துவா். இதில், பள்ளிகள் திறப்பது தொடா்பாகவும் விவாதித்து முடிவு எடுக்கப்படும். பள்ளிகள் திறப்பது தொடா்பான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடுவாா் என்றாா் அமைச்சா்.
தனியாா் பள்ளி மாணவா்களை அந்தந்த கல்வி நிறுவனப் பேருந்துகளில் வர வேண்டும் என நிா்பந்திப்பதாகவும், அரசின் சலுகை பயணச் சீட்டில் பயணம் செய்ய சான்று அளிப்பதில்லை எனவும் பெறப்பட்டுள்ள புகாா்கள் குறித்து விசாரித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் அமைச்சா் உறுதியளித்தாா். பள்ளிகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும், மாணவா்கள், பெற்றோா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது.