வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்தை கடந்தது

உலகளவில் சுமார் 190 நாடுகளில் இயல்பு வாழ்க்கையைப் பாதித்த கரோனாவிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம் பெரும் பொருளாதார இழப்புகளை உலகமே சந்தித்து வருகிறது.

இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமுடக்கமும் தொடர்ந்து அமலில் உள்ளது.

அதேபோல் தமிழகத்திலும் கரோனா பொதுமுடக்கம் என்பது தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆரம்பகால முழுமுடக்க காலத்திலிருந்தே அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் நகைக்கடைகளும் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. 

உலக அளவில் தங்கத்தை அதிகமாக நுகர்வு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

ஆனால் சில மாதங்களாக தங்கம் இறக்குமதி குறைவாக இருந்த போதிலும் அதன்விலை அதிகரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முடக்கம் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை தங்கத்தின்விலை சவரனுக்கு 9 ஆயிரத்து 264 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

பொதுமுடக்கம் தொடங்குவதற்கு முன்பு, அதாவது கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 31,984 ரூபாயாக இருந்தது.

அடுத்து மார்ச் 17-ஆம் தேதி 30,560 ரூபாய்க்கு குறைந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை அதனைத் தொடர்ந்து மின்னல் வேகத்தில் விலையேற்றம் கண்டது.

மே மாதம் 8-ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35,592 ஆக அதிகரித்தது. ஜூன் 1-ஆம் தேதி ஒரு சவரன் 36,096 ரூபாயாக அதிகரித்த நிலையில், ஜூலை 1-ஆம் தேதி ஒரு சவரன் 37,392 ரூபாயாக அதிகரித்தது.

இந்நிலையில் ஜூலை 27-ஆம் தேதி (இன்று) ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 40,104 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே