சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக கொடியை பயன்படுத்தியதோடு தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எனவும் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி வெளியே வந்தார். அதன்பின்னர் தமிழகம் வந்த சசிகலா எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இதனிடையே தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் இணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்திருந்தார் சசிகலா.
இதையடுத்து இன்று காலை மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். ஆட்சியமைப்போம் என சசிகலா பேசியிருந்தார். ஆனால் அதிமுகவினர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது சசிகலா தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிமுக கொடியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், “ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர்தான் எனத்தொடர்ந்த வழக்கு வரும் 15ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளநிலையில் இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.