நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை – விஜய் தரப்பில் விளக்கம்..!!

விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்து விட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், அ.இ.த.வி.ம.இ அமைப்பு, நடிகர் விஜய் கட்டுப்பாட்டில் தான் செயல்படுவதாக புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருவதாக கூறி கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், தங்கள் அமைப்பை சங்கங்களின் பதிவாளரிடம் பதிவு செய்தார்.

விஜய் மக்கள் இயக்கத்துக்கு தலைவராக இயக்குநர் சந்திரசேகரன், பொருளாளராக, விஜய்யின் தாயார் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், தனது புகைப்படம் இடம்பெற்றுள்ள கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை நகர 15ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக எஸ்.ஏ. சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், 2021 பிப்ரவரி 28ம் தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா சேகர், மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்து அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சங்கங்களின் பதிவாளர்க்கு கடிதம் அளித்துள்ளதாகவும் தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், அதனை கலைத்துவிட்டு விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை 15ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர்மனுதாரரான மகேஸ்வரன் தரப்புக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணையை அக்டோபர் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதற்கிடையே, விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் கெளரவத் தலைவர் புஸ்ஸி ஆனந்திடம் கேட்டபோது, நடிகர் விஜய்யின் கட்டுப்பாட்டில் தங்கள் அமைப்பானது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்டுக்கோப்பாக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதன் மூலம் மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே