உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்..

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் நிலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி உள்ளிட்ட 12 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 27-ம் தேதியும் சேலம் உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றியங்களில் 30-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகளை தனித்தனியே பிரித்து வைக்கும் பணி நடந்து வருகிறது.

வாக்குச்சாவடி மையங்களும் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருமருகல், கொள்ளிடம், செம்பனார்கோவில், சீர்காழி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 2003 வாக்குச் சாவடி மையங்களில் முதல்கட்டமாக வரும் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பெட்டி, மை, அரக்கு, பூத் ஸ்லிப், வாக்குச்சீட்டு, பசை, நூல்கண்டு, கட்டுக்கம்பி, சாக்கு, பேனா, பென்சில், குத்தூசி  உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளுக்கு 63 வாகனங்களும், காவல்துறையினருக்கு 12 வாகனங்களும், பறக்கும் படையினருக்கு 80 வாகனங்களும் என 153 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வாகனங்களுக்கான உத்தரவு ஆணை, டோக்கன், ஓட்டுநர் அடையாள அட்டைகள் ஆகியவை வழங்கப்பட்டன.

டீசல் கட்டணம், வாடகை ஆகியவற்றுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் வாக்குப் பதிவுக்கான பொருட்கள் நாளை காலை வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம்  கிழக்கு ஆரணி, மேற்கு ஆரணி ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் இரண்டாம் கட்டத்தில் தான் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி ஆரணி கோட்டை மைதானத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு வகுப்பறைகளில் தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

கடலூர் மாவட்டத்தில் கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல் புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

இங்கு வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டி, ரப்பர் ஸ்டாம்ப், ஸ்கேல், பென்சில் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான 72 பொருட்கள் சாக்குப் பையில் வைத்து அந்தந்த  வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே