சேலத்தில் திறந்த வேனில் சென்றும், செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், திருவாரூரைத் தொடர்ந்து சேலம் சென்றுள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தன.

இதைத் தொடர்ந்து பிரச்சார வேனில் சென்ற மு.க.ஸ்டாலின் சத்திரம், லாரி மார்க்கெட் பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

பின்னர் வேனில் இருந்து இறங்கி செவ்வாய்பேட்டை பகுதியில் வீதி வழியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டதும் அங்கு திரண்டவர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

முதியவர்கள், மூதாட்டிகள், இளைஞர்கள், வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல தரப்பினரிடமும், சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரனுக்கு வாக்கு சேகரித்தார்.

சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே தனது பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் முடித்துக் கொண்டார்.

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருண் மற்றும் ஏற்காடு தொகுதி வேட்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

பின்னர், நாமக்கல் மாவட்டதுக்கு செல்லும் ஸ்டாலின், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே