கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் கரோனா அவசரத் தேவை பயன்பாடு மற்றும் சுகாதார நடவடிக்கை தேவைகளுக்காக ஆயத்தநிலை தொகுப்புக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

கரோனா அவசரத் தேவை பயன்பாட்டில் உடனடி தேவைக்கும் (ரூ.7774 கோடி) மீதித் தொகை நீண்டகால அடிப்படையிலும் நடுத்தர காலத்துக்கான தேவைக்காகவும் பயன்படுத்தப்படும்.

மருத்துவப் பரிசோதனை நடைமுறைகள் உருவாக்குதல், கரோனாவுக்கு என்றே பிரத்யேகமான சிகிச்சை மையங்கள், நோய்த் தொற்று கண்டறியப்படுபவர்களின் சிகிச்சைக்குத் தேவைப்படும் அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள் மற்றும் ரசாயன மருந்துகளை மையமாக்கப்பட்ட கொள்முதல் செய்வது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

மேலும் எதிர்காலத்தில் நோய் பரவாமல் தடுத்தல் மற்றும் ஆயத்தநிலை உருவாக்குதலில் தேசிய மற்றும் மாநில சுகாதார முறைமைகளைப் பலப்படுத்துதல், ஆய்வகங்கள் அமைத்தல் மற்றும் கண்காணிப்பு செயல்பாடுகளை பலப்படுத்துதல், பயோ-உத்தரவாத ஆயத்தநிலை, நோய்த் தொர்று ஆராய்ச்சிகளை உருவாக்குதல் சமுதாயத்தினரை பங்கேற்கச் செய்து ஆபத்து வாய்ப்பு பற்றிய தகவல்களைத் தெரிவித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த நிதி செலவிடப்படும்.

இதன்மூலம் இந்தியாவில் கரோனா பரவுதல் வேகத்தைக் குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக இருக்கும்.

இந்தச் செலவினங்களின் பெரும்பகுதி, உடனடியாக செயல்படக் கூடிய அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தேசிய மற்றும் மாநில சுகாதார முறைமைகளைப் பலப்படுத்துவது, நோய்த் தாக்குதல் ஆராய்ச்சியை பலப்படுத்துதல், ஒன் ஹெல்த் என்பதற்கான பல துறை தேசிய நிறுவனங்கள் மற்றும் தளங்கள் உருவாக்குதல், சமுதாய அளவில் பங்கேற்பை அதிகரித்து ஆபத்து வாய்ப்புகள் பற்றி தகவல்கள் அளித்தல், திட்டங்களை அமல் செய்து, நிர்வகித்து, திறன் மேம்பாடு செய்து, கண்காணித்து, மதிப்பீடு செய்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும்.

இதில் ஒதுக்கப்பட்ட நிதிகளை, அமலாக்க முகமைகளுக்குள் (தேசிய சுகாதாரத் திட்டம், மத்திய கொள்முதல், ரயில்வே, சுகாதார ஆராய்ச்சித் துறை/ இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்., நோய்க் கட்டுப்பாட்டு தேசிய மையம்) இதற்குள் மறு ஒதுக்கீடு செய்வதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

உருவாகும் சூழ்நிலைக்கு ஏற்ப அப்படி மறு ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே