பிரபல ரவுடியின் மனைவியை வெட்டிக் கொன்ற கும்பல்..!!

காவலர்களால் என்கவுண்டர் செய்யப்பட்ட ரௌடியின் மனைவி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம் பகுதியை சார்ந்தவர் முருகன். இவரது மகன் கிருஷ்ணன் (வயது 30). கிருஷ்ணனின் மனைவி காந்திமதி (வயது 27). கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இரவு கிருஷ்ணன் தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து, சுப்பராயநல்லூர் பகுதியை சார்ந்த ரௌடி வீரா என்ற வீராங்கனை தலையை துண்டித்து கொலை செய்து தலைமறைவானார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் தீபன் தலைமையிலான காவல் துறையினர் கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை மடக்கிப்பிடித்த நிலையில், பிற கொலையாளிகளை அடையாளம் காட்ட சென்ற போது, கிருஷ்ணன் காவல் உதவி ஆய்வாளர் தீபனின் தலையை அறுத்துவிட்டு தப்பி செல்ல முயற்சித்தார். இதன்போது, காவல் அதிகாரிகள் கிருஷ்ணனை என்கவுண்டரில் போட்டுத்தள்ளினர்.

இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தினை அன்றைய நாளில் அதிரவைத்த நிலையில், கிருஷ்ணனின் கூட்டாளிகள் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கிருஷ்ணனின் மனைவி காந்திமதி குப்பன்குளத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 08:30 மணியளவில் கடைக்கு சென்று காந்திமதி வீட்டிற்கு வந்த போது, அவரை இடைமறித்த 3 பேர் கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது.

உடலில் வெட்டுக்காயத்துடன் பாதிக்கப்பட்டு சரிந்து விழுந்த காந்திமதி, இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வீரா என்ற வீராங்கனின் கொலை வழக்கில் பழிக்குப்பழி வாங்கும் விதமாக வீராவின் கூட்டாளிகளால் காந்திமதி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் கும்பலால் மற்றொரு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடந்து வருகிறது. குப்பன்குளம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்பு கருதி 50 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே