வ.உ.சிதம்பரத்தின் முழு உருவப்படம் சட்டமன்றத்தில் வைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வரும் முதல்வர் பழனிசாமி இன்று சிவகங்கை மாவட்டத்துக்கு சென்றுள்ளார்.

அம்மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை செய்த முதல்வர், மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்ட பணிகளை தொடக்கிவைத்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ‘சிவகங்கையில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன. குறைதீர் முகாம்கள் மூலம் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 76 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன’ எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ‘சிவகங்கையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது சிவகங்கை மக்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் திட்டங்களுக்கே அரசு முன்னுரிமை கொடுக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

ரூ.14,500 கோடி மதிப்பிலான காவிரி – குண்டாறு திட்டத்திற்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படும். சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை 100லிருந்து 150 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ‘ எனத் தெரிவித்தார்.

மேலும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி யின் முழு திருவுருவப்படமும், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியாரின் முழு உருவப்படமும், மோகன் குமாரமங்கலத்தின் உருவப்படமும் சட்டமன்றத்தில் வைக்கப்படும் என தெரிவித்த முதல்வர், 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரிட்டு அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே