செல்போன் ரீசார்ஜ், மின்விசிறி விற்பனை… – சில தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு

மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு கூறியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

குறிப்பாக சமூக இடைவெளியை உண்டாக்க வேண்டுமென்பதால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பின்னர் இந்த ஊரடங்கு மே3 ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு அமலில் இருந்தாலும், சில தளர்வுகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. 

தொற்றின் தாக்கத்திற்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் தளர்வுகளை கொண்டுவரலாம் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

அந்தந்த மாநில அரசுகள் அதற்கேற்ப முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறி இருந்தது.

இந்நிலையில் மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக இன்னும் சில தளர்வுகளை மத்திய அரசு கூறியுள்ளது.

அதன்படி, கல்வி படிப்பு தொடர்பான புத்தகங்கள் விற்கும் கடைகளை திறக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், மின் விசிறி விற்பனை செய்யும் கடைகள், முதியவர்களுக்கு உதவி செய்யும் சேவைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், நகரப்பகுதிகளில் இயங்கும் ப்ரட் மற்றும் உணவுப்பொருட்கள் தொடர்பான மாவு தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பால், பருப்பு, தேன் தயாரிப்பு மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள், விவசாயம் தொடர்பான வேலைகள் போன்றவை செயல்படலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தல், சமூக இடைவெளியை உறுதி செய்வது கட்டாயம் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே