தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி தருமாறு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இந்தியாவில் இன்று வரை 7447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 643 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 239 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க  21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல  மாநில முதல்வர்கள் நோய் பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த காணொளி ஆலோசனை கூட்டத்தில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக  தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம்  கோரிக்கை விடுத்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வைத்த கோரிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:

அதிகளவிலான பிசிஆர் மற்றும் விரைவு பரிசோதனை உபகரணங்களை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.

பிபிஇ, என்-95 முகக் கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போதுமான எண்ணிக்கையில் வழங்கப்பட வேண்டும். இதற்காக முன்னதாக ரூ. 3,000 கோடி ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தேன். அதை விடுவிக்க வேண்டும்.

மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ. 510 கோடியை விடுவித்தமைக்கு பிரதமருக்கு நன்றி.

மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ. 1,000 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே