சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கோவிலுக்கு நிலத்தை தானமாக எழுதி கொடுத்த தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி அருகே உள்ள சின்னமன்னாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ரங்கன், தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
விவசாயியான ரங்கன், சின்னமன்னாயக்கன் பாளையத்தில் உள்ள பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
மேலும் கோவிலுக்கு 25 சென்ட் நிலமும் தானமாக எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரங்கனின் மூத்த மகன் ரமேஷ் தனது தந்தையின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தகராறு முற்றியதால் அருகில் கிடந்த கட்டையை எடுத்து ரமேஷ் தனது தந்தையை சரமாரியாக தாக்கினார்.
இந்த கொடூர தாக்குதலில் ரங்கன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழும் இடத்திற்கு சென்ற போலீசார், ரங்கனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரங்கனின் மனைவி வசந்தா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேசை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.