69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தஞ்சை அழகர் மற்றும் திரிபுராந்தகர் சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன.
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 30க்கும் மேற்பட்ட சிலைகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது.
இதனை விசாரிக்க களமிறங்கிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு, ராஜராஜ சோழன் சிலையையும், லோகமா தேவி சிலையையும் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து கடந்த ஆண்டு மீட்டது.
சிலை தேடுதல் வேட்டை தொடர்ந்து வரும் நிலையில், காலையில் பொன். மாணிக்கவேல் தலைமையிலான 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர், தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தனர்.
அங்கிருந்து அரண்மனை கலைக்கூடம் வந்த அதிகாரிகள், நாயக்கர் மகாலிலும் நீண்ட நேரம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் கலைக்கூடத்திலிருந்து 2 ஐம்பொன் சிலைகளை மீட்டனர்.
56.75 கிலோ எடை கொண்ட திரிபுராந்தகர் சிலையும், 60.75 எடைகொண்ட வீணாதர தட்சிணாமூர்த்தி சிலையும் மீட்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த இரண்டு சிலைகளும் 69 ஆண்டுகளுக்கு முன் கலைக்கூடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மீட்கப்பட்டுள்ள 2 சிலைகளும் முன்னதாக ராஜகோபாலசுவாமி கோவிலிலும், அதன் பின்னர் தஞ்சை தேவஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னரே கலைக்கூடத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் பொன். மாணிக்கவேல் கூறினார்.
இந்த சிலைகள், புதன்கிழமை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.