சென்னையில் மதுபோதையில் இரண்டரை மாத பெண் குழந்தையை அடித்து கொலை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மது போதை ஒருவரை இத்தனை கொடூர செயலை செய்யத் தூண்டுமா?? என்று கேட்பவர்களை வாயடைக்கச் செய்து இருக்கிறது இச்சம்பவம்.
சென்னை கேகே நகரில் வசித்த ஆறுமுகம் – துர்கா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து துர்கா, எல்லப்பன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார்.
அவர்களுக்கு இரண்டரை மாதங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
மதுவுக்கு அடிமையான எல்லப்பன், தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் சண்டை போடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். சம்பவத்தன்று இரவும் அதுதான் நடந்திருக்கிறது.
தலைக்கேறிய போதையில் இருந்த எல்லப்பன் துர்காவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கூச்சல் சத்தம் கேட்டு அலறி எழுந்த அந்த பெண் சிசு பயத்தில் வீறிட்டு அழத் தொடங்கியது.
குழந்தையின் அழுகுரல் எரிச்சலை ஏற்படுத்தியதால் திடீரென்று ஆவேசமடைந்த எல்லப்பன் பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் அதன்தலையில் ஓங்கி அடித்துள்ளார். காதுகளில் ரத்தம் வழிந்த நிலையில் அலறித் துடித்த அந்த சிசுவின் மூச்சு அங்கே அடங்கிவிட்டது.
பதற்றமடைந்த துர்கா, குழந்தையின் காதுகளில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டு, கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று இருக்கிறார். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.
அங்குதான் தம்பதியர் இருவரும் தங்களின் நாடகத்தை அரங்கேற்ற தொடங்கியதாக கூறுகிறது காவல்துறை.
யாரும் பார்காத நேரத்தில் குழந்தையின் சடலத்தை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற இருவரும் கொலையை மறைக்க சதி திட்டத்தை தீட்டி இருக்கிறார்கள்.
குழந்தையின் சடலத்தை குளிப்பாட்டி அதற்கு பவுடர் போட்டு கண்களில் மை வைத்து அழகாக அலங்கரித்திருக்கிறார் தாய் துர்கா.
பிறகு 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து தனது குழந்தை பேச்சு மூச்சற்று கிடப்பதாக பதற்றத்தோடு தகவல் கொடுத்துள்ளார்.
அவர்களின் திட்டப்படியே ஆம்புலன்ஸ் வந்தது. குழந்தையை ஏற்றிக்கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கேகே நகரில் உள்ள அதே இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றததுதான் இச்சம்பவத்தில் மிக முக்கிய திருப்புமுனை.
ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக உறுதி செய்த அதே மருத்துவரிடம் மீண்டும் அந்த குழந்தையின் சடலத்தை எடுத்துச் சென்றிருக்கிறார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.
அதை பார்த்து சந்தேகம் அடைந்த மருத்துவர், காவல்துறைக்கு தகவல் கொடுத்த போதுதான் இந்த சதிச் செயல் அம்பலமானதாக கூறுகிறார்கள் காவல்துறையினர்.
இதையடுத்து, எல்லப்பனை கைது செய்த காவல்துறையினர், தாய் துர்காவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.