ஊழலுக்கு வழிவகுக்கும் இ-பாஸ் முறை – ஸ்டாலின்

மக்களின் உணர்வுகளை மதித்து மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கான இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என திமுக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, காலவரையறையின்றி நீட்டித்துக்கொண்டே போவதால் ஏற்படும் பொருளாதார – சமூகப் பின்னடைவுகளைக் கருதி, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்; இ-பாஸ் முறையை மட்டும் தொடர்ந்து நீட்டித்து, மக்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி வருவது முழுவதும் மனிதநேயமற்ற செயல். ஏறக்குறைய ஐந்தாவது மாதமாக, ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு, தங்களது அவசரத் தேவைகளுக்குக் கூட போக முடியாமல், மக்கள் அலைக்கழிக்கப்பட்டு அல்லல்களுக்குள்ளாக்கப் படுகிறார்கள்.

திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு உள்ளிட்ட அவசரத்தேவைகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் – இந்த அவசரங்களுக்குக் கூட விண்ணப்பிக்கும் இ-பாஸ் பலமுறை நிராகரிக்கப்பட்டு, இ-பாஸ் வழங்கும் நடைமுறை படுதோல்வி அடைந்துவிட்டது.

பத்து முறை விண்ணப்பித்தாலும், நேர்மையான முறையில் பாஸ் கிடைப்பதில்லை.

மத்திய அரசே ஊரடங்குத் தளர்வுகளை அறிவித்து, இ-பாஸ் நடைமுறை கட்டாயம் இல்லை என்று அறிவித்த பிறகு – அ.தி.மு.க. அரசு மட்டும் இந்த முறையை தொடர்ந்து உள்நோக்கத்துடன் வைத்திருப்பது, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவிதத்திலும் தீர்வாகாது.

ஊரடங்குத் தளர்வுகள் கொடுத்து, ‘வேலைக்குப் போகலாம், கம்பெனிகள் திறக்கலாம்’ என்று ஒருபுறம் அறிவித்துள்ள நிலையில் – இன்னொரு புறம் அவர்களை வீட்டுக்குள்ளே முடக்கும் விதத்தில், அவரவர் சொந்தப் பொறுப்பில் கூட, ‘மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம்’ என்று அறிவித்திருப்பது என்ன வகை கொரோனா நிர்வாகம்?

ஆகவே மக்களின் உணர்வுகளை மதித்து, மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறையை உடனே ரத்து செய்ய வேண்டும்.

ஊரடங்குத் தளர்வுகள் மக்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்றால், இந்த நடவடிக்கை உடனடித் தேவை.

வெளி மாவட்டங்களுக்கு சொந்தப் பொறுப்பில் பயணம் செய்வோருக்கு கொரோனா நோய்த் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இந்த இ-பாஸ் நடைமுறை இனியும் தேவையற்றது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே