நள்ளிரவில் மக்களவையில் நிறைவேறியது குடியுரிமை மசோதா

மக்களவையில் கடும் அமளிக்கிடையே 12 மணி நேர விவாதத்துக்குப் பிறகு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்கள் அல்லாத இதர மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று கூறினார்.

காங்கிரஸ், மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தாமல் இருந்திருந்தால், இந்த மசோதா தேவைப்பட்டிருக்காது என்றும் அமித்ஷா கூறியதால் அவையில் அமளி ஏற்பட்டது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, அரசியலமைப்பிற்கு எதிரானது என கூறி, மசோதாவை அறிமுகப்படுத்த காங்கிரஸ், அகில இந்திய முஸ்லீம் மஜ்லீஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

நிறைவில் நள்ளிரவு 12 மணி அளவில் 311 ஆதரவு வாக்குகள் மற்றும் 80 எதிர்ப்பு வாக்குகளுடன் மசோதா நிறைவேறியது.

மசோதாவிற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அழகாக விளக்கி, நிறைவேற்றியதற்கு அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார்.

மாநிலங்களவையில் குடியுரிமை மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

அங்கு பாஜக-வுக்கு போதிய பலம் இல்லாததால் அதிமுக, தெலுங்கு தேசம், பிஜு ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உதவியை பாஜக நாடியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே