டெல்லியில் 1,731 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் 40 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் முறைப்படுத்தப்பட்டதன் மூலம் வர்த்தகம் வளர்ச்சி அடையும் என்று கூறினார்.
மற்ற கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில், பாஜக வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக மோடி குறிப்பிட்டார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக மத்திய அரசு 1.5 கோடி வீடுகளை கட்டித் தந்துள்ளதாகவும், அவர்களிடம் மதம் குறித்து கேட்டதில்லை எனவும் பிரதமர் கூறினார்.
குடியுரிமை சட்டத்திருத்தம் இந்திய குடிமகன் யாரையும் பாதிக்காது எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பா.ஜ.க. ஆட்சியின் கொள்கை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை குறித்து அவர் பேசுகையில், என்னை வெறுப்பவர்கள் எனது உருவ பொம்மையை எறியுங்கள், ஆனால் ஏழைகளை துன்புறுத்தாதீர்கள். நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மோதலை உருவாக்குவதற்காக உயர் பதவிகளில் இருப்பவர்கள் போலி வீடியோக்களை வெளியிட்டு மக்களை தூண்டி விடுகின்றனர் என கூறினார்.