விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்வார் : கருப்பணன்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பினர் மத்தியிலும் இருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 30ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதற்கான வாக்கு சேகரிப்பில் அனைத்து வேட்பாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பவானி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கவுந்தம்பாடி, ஓடத்துறை, இந்திரா நகர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன், தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் தற்போது மூடப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கருப்பணன், மதுக்கடைகளை மேலும் குறைப்பது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

அதோடு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து சட்டமன்ற தேர்தலுக்கு முன் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பினர் மத்தியிலும் இருப்பதாக அமைச்சர் கருப்பணன் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே