விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது – பிரதமர் மோடி

வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயத்துறையில் முழுமையான மாற்றம் ஏற்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கான உற்பத்தி, வர்த்தக மற்றும் வணிக மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாக்களை சட்டமாக்குவதன் மூலம் விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சுதந்திரமாக விற்பனை செய்ய முடியும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். 

இந்திய விவசாய வரலாற்றில் இது முக்கியமான தருணம் என கூறியுள்ளார். கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மூலம் விவசாயத்துறையில் முழுமையான மாற்றம் ஏற்படும் என்றும்; கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘இடைத்தரகர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்திய விவசாயிகள் பல ஆண்டுகளாக இன்னல்களை அனுபவித்தனர்.

தற்போது நிறைவேற்றப்பட்ட மசோதா மூலம் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து அவர்கள் விடுபட்டுள்ளனர்.

இதன்மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாவது மட்டுமல்லாமல், அவர்களது வாழ்வாதாரமும் மேம்படும்.

நமதுவிவசாய துறைக்கு, நவீன தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.

இந்த மசோதாக்கள் மூலம், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவி கிடைப்பதுடன், அவர்களின் உற்பத்தியை நல்ல முறையில் அதிகரிக்க உதவும். இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

நான் முன்னரே சொல்லியது போல், மீண்டும் சொல்கிறேன். குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்.

அரசு கொள்முதல் முறை தொடரும். நாங்கள் விவசாயிகளுக்கு சேவை செய்யவே உள்ளோம்.

விவசாயிகளை ஆதரிக்கவும், வரும் தலைமுறையினர் சிறந்த எதிர்காலத்திற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே