வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை விவசாயிகள் வீடு திரும்பப்போவதில்லை – ராகுல் காந்தி

நீங்கள் யாரைத் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என அழைக்கிறீர்களோ அவர்கள்தான் இந்த நாட்டுக்கு வளத்தை அளிப்பவர்கள் – ராகுல் காந்தி

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து அவர்களுக்கு ஆதரவும் கிடைத்து வருகிறது.

இந்தநிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பெறப்பட்டிருக்கும் 2 கோடி கையொப்பங்களுடன், இன்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் நிர்வாகிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து மனு அளிக்கத் திட்டமிட்டிருந்தனர்.

இந்தநிலையில், டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், ஜனாதிபதி மாளிகைக்கு அனுமதி பெறப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்,

பேரணியாகச் செல்ல அனுமதி இல்லை என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கட்சி அலுவலகம் வந்த ராகுல் காந்தி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.பி-க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ராகுல் காந்தி தலைமையில் பேரணியாக ஜனாதிபதி மாளிகை நோக்கிப் புறப்பட்டனர் காங்கிரஸ் கட்சியினர்.

இதற்கிடையே பேரணியாகச் சென்ற காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தி, கைதுசெய்தனர். கட்சியினரை பேருந்தில் ஏற்றி போலீஸார் அனுப்பிவைத்தனர்.

கைதுசெய்யப்பட்ட பிரியங்கா காந்தி, “இந்த அரசாங்கத்துக்கு எதிரான எந்தவோர் எதிர்ப்பும் பயங்கரவாதத்தின் பின்புலம் கொண்டதாக வகைப்படுத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு எங்கள் ஆதரவுக் குரலைக் கொடுப்பதற்காக இந்த அணிவகுப்பை நாங்கள் மேற்கொண்டுவருகிறோம். நாம் ஜனநாயகத்தில் வாழ்கிறோம்.

அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்கள். ஜனாதிபதியைச் சந்திக்க அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

இதில் என்ன பிரச்னை… எல்லைகளில் முகாமிட்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் குரல்களைக் கேட்க அரசு தயாராக இல்லை” எனக் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, “சில நேரங்களில் பா.ஜ.க-வினர் எங்களை மிகவும் பலவீனமாக இருக்கிறோம் என்கிறார்கள். நாங்கள் எதிர்க்கட்சியாகக்கூடத் தகுதி பெறவில்லை என்கிறார்கள். ஆனால், சில சமயங்களில், நாங்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள்.

நாங்கள் ஒரு மாதத்துக்கு டெல்லியின் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகளை கூட்டியதாகச் சொல்கிறார்கள். நாங்கள் யார் என்பதை அவர்கள் முதலில் தீர்மானிக்க வேண்டும்” என்றார் காட்டமாக.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இதற்கிடையே மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதிலுமிருந்து பெறப்பட்ட இரண்டு கோடி கையெழுத்துப் பிரதிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தார் ராகுல் காந்தி.

பின்னர் பேசிய ராகுல், “இந்த விவசாயச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் என்று நான் ஜனாதிபதியிடம் சொன்னேன். இந்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எழுந்து நிற்பதை நாடு பார்க்கிறது.

இந்த விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை இந்த விவசாயிகள் வீடு திரும்பப் போவதில்லை என்று நான் பிரதமரிடம் சொல்ல விரும்புகிறேன்.

நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை அரசு உடனே கூட்டி இந்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

நீங்கள் யாரை தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என அழைக்கிறீர்களோ அவர்கள்தான் இந்த நாட்டுக்கு வளத்தை அளிப்பவர்கள்.

அவர்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகள். எதிர்க்கட்சிகள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் நிற்கும்” என்றார் உறுதியாக..!!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே