பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

நாளை துவங்க உள்ள பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்விற்கு தடை விதிக்கவும், அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களையும் தேர்ச்சி என அறிவிக்கக்கோரியும் தொடர்ந்த வழக்கில் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

கரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுதேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21-ம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய செய்து தனி தேர்வு எழுதும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி திருச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவரின் தந்தை பாலகிருஷ்ணன் சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மட்டும் ஹேமலதா அடங்கிய அமர்வில் செப்.3-ல் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில், ‘ தனி தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எந்த வித பாதுகாப்பு நடைமுறைகளை அறிவிக்காமல் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கரோனா தொற்று முழுமையாக முடியும் வரை தனிதேர்வர்களுக்கான தேர்வை தள்ளி வைக்க வேண்டும்’. என வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாற்றுத்திறனாளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3-ம் தேதி முடித்து வைத்தனர்.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுதாரர் பாலகிருஷ்ணன் சார்பில் தாக்கல் செய்த மனு இன்று அவரச வழக்காக நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது,

அப்போது மனுதாரர் தரப்பில், ‘கரோனா தொற்று காரணமாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படவில்லை.

தனிமனித விலகலை பின்பற்றுவதும் முக கவசம் அணிவதும் மாற்றுத்திறனாளி மாணவர்களால் சாத்தியமில்லை என்பதால் நாளை நடைபெறும் தனித் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்’. என வாதிடப்பட்டது.

பள்ளி கல்வித் துறை தரப்பில், ‘நீதிமன்ற உத்தரவுப்படி தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவருக்கும், அரசு சார்பில் அவர்களது வீடுகளுக்கே சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அறைகளில் போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது’. எனத் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் நாளை தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

அதேசமயம், தனித் தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை, அவர்கள் தேர்வை எதிர்கொண்ட விதம், தேர்வின்போது ஏதேனும் சிரமம் அவர்களுக்கு ஏற்பட்டதா? என்பது குறித்து தமிழக அரசும், மனுதாரரும் 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே