பெண்கள் குறித்து பாக்யராஜ் அவதூறாக பேசியதாக ஆந்திர மகளிர் ஆணையம் புகார்

பெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும்  நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆந்திர மகளிர் ஆணையம், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

எம்.பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள கருத்துக்களை பதிவுசெய் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.

இயக்குநர் கே.பாக்யராஜ், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன் , நடிகை மீரா மிதுன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், திரைத்துறையில் நான் வெற்றி பெற்றதற்கு காரணம் எனது கருத்துக்களை நான் துணிந்து முன்வைத்ததே; எனது உதவியாளர்களும் தங்களது கருத்துகளை முன்வைக்க நான் உறுதுணையாக இருந்துள்ளேன் என்று பாக்யராஜ் தெரிவித்தார்.

அனைத்து திரையரங்கிலும் ஒரு சிறு படம் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இதனை அரசு சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் பாக்யராஜ் கேட்டுக்கொண்டார்.

மேலும் இன்றுபோய் நாளை வா, கைதியின் டைரி எனும் இரண்டு படங்களையும் நான் ஒரே இரவில் எழுதியிருந்தேன் என்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பாக்யராஜ் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில இளைஞர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றார்.

மேலும், என்னை பொறுத்தவரை இளைஞர்களிடம் மட்டுமல்ல, அந்தப் பெண்களிடமும் தவறு இருக்கிறது என்று கூறினார் .

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று கூறிய பாக்யராஜ் பெண்களும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆண் தவறான நடத்தையுடன் இருந்தாலும் முதல் மனைவிக்கு குறை வைப்பதில்லை; ஆனால் பெண் கள்ளக் காதலனுடன் இருந்தால் அவளது கணவன் கொலை செய்யப்படுகிறான். இதை செய்தித்தாள்களிலேயே நாம் பார்க்கலாம் என்றும் பாக்யராஜ் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி வாசிரெட்டி பத்மா, தமிழக மகளிர் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒருசில சம்பவங்களை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த மகளிர் இனத்தையும் அவமதிக்கும் வகையில் பாக்யராஜ் பேசியிருப்பதாகவும் அவர் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே