தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள Amphan புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்ற போதும், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள Amphan புயல், தற்போது உச்ச உயர் தீவிர புயலாக உருமாறி, வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

சென்னைக்கு கிழக்கே ஏறக்குறைய 650 கிமீ தொலைவில் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் புயல் மையம் கொண்டுள்ளது.

இதனால், தெற்கு வங்க கடல் பகுதியில் காற்று அவ்வப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிவருகிறது.

மத்திய வங்க கடல் பகுதியில் அவ்வப்போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.

மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Amphan புயல் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாமக்கல், கரூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் Amphan புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே வரும் 20ம் தேதி பிற்பகலிலோ அல்லது மாலையிலோ கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதனால் வடக்கு ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்பகுதிகளில் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனமழையுடன் புயல் காற்று வீசக் கூடும் என்பதால் ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

ஒடிஷாவிற்கு 7 மற்றும் மேற்கு வங்கத்திற்கு 6 தேசிய பேரிடர் மீட்புப் படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தூத்துக்குடி, கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

இதனிடையே தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றை சூறைக்காற்று சுமார் 100 மீட்டர் தூரம் நகர்த்திச் சென்ற நிகழ்வு நடந்தேறியுள்ளது.

சத்துப்பள்ளி என்ற இடத்தில் வீசிய சூறைக்காற்றால் பின்னால் தள்ளப்பட்ட பேருந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதி நின்றது.

கோவையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் டவுன்ஹால் பகுதியில் சிக்னல் சாய்ந்து விழுந்தது.

காந்திபுரம், ராமநாதபுரம், பந்தயசாலை, வடவள்ளி, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததோடு, பலத்த காற்றும் வீசியது. இதில் டவுன்ஹால் பகுதியில் சிக்னல் சாய்ந்து விழுந்து சேதமானது.

திருச்சி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே