கமலுக்கு ஆதரவாக அக்‌ஷரா ஹாசன், சுஹாசினி நடனமாடி பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக, அவரது மகள் அக்‌ஷரா ஹாசன், அண்ணன் மகளும், திரைப்பட நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் நடனமாடி பிரச்சாரம் செய்தனர்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்கிறார். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக அவரது மகள் அக்‌ஷரா ஹாசன், அண்ணன் மகளும், திரைப்பட நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் ஆகியோரும் கோவையில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

இதையடுத்து இன்று காலை முதலே கமல்ஹாசனுக்கு ஆதரவாக அக்‌ஷரா ஹாசன், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பாரதி பார்க், சாயிபாபா காலனி உள்ளிட்ட இடங்களில் இன்று பிரச்சாரம் செய்தனர். மேலும், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டறிக்கைகளையும் பொதுமக்களிடம் அவர்கள் விநியோகித்தனர்.

பிரச்சாரத்தின்போது, அக்கட்சியினர் சார்பில் ஜமாப் தாளம் அடித்து உற்சாகப்படுத்தினர். அப்போது ஜமாப் தாளத்துக்கு ஏற்றவாறு அக்‌ஷரா ஹாசன், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் நடனமாடி, பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தனர். இவர்களது நடனத்தால் உற்சாகமடைந்த பொதுமக்களும் இவர்களுடன் இணைந்து நடனம் ஆடினர்.

ராதிகா பிரச்சாரம்

அதேபோல், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக, சமக கட்சியின் நிர்வாகியும், திரைப்பட நடிகையுமான ராதிகா சரத்குமார், மசால் லே அவுட், காந்தி நகர், உக்கடம், மரக்கடை, சித்தாப்புதூர் உள்ளிட்ட இடங்களில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வேனில் நின்றபடியும், வீதி வீதியாக நடந்து சென்றவாறும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே