டாட்டூ குத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் மைகளில் எண்ணிடலங்கா ரசாயனங்கள் இருப்பதால் அவை உடலுக்கு பெரும்கேடு விளைவிக்கக்கூடும் என சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு டாட்டூ கலாசாரம் நம்மிடம் ஆழமாக வேரூன்றி யிருக்கிறது. முன்பு, பிடித்தவர்களின் பெயரை பச்சை குத்திக் கொண்டனர். இன்றைக்கு அதையெல்லாம் கடந்து டாட்டூவில் பெயர்கள், ஓவியம் என பலவும் வரையப்படுகின்றன. இந்த டாட்டூ மோகத்தில் எதையும் யோசிக்காமல் குத்திக் கொள்கிறவர் களுக்கு, இதன் அபாயம் புரிவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். டாட்டூ குத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த, சரும நோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசுவிடம் கேட்டோம்.
வானதி திருநாவுக்கரசு
“நம் நாட்டில் டாட்டூ போடுவதற்குப் பயன்படுத்தப்படும் நிறமி (pigment) எந்த அளவுக்குத் தரமானதாக இருக்கிறது என்பதே கேள்விக்குறிதான். அமெரிக்காவில் இதை முறைப்படுத்தி யிருக்கிறார்கள். சருமத்தில் வினைபுரியாத அளவிலான நிறமிகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற விதிமுறைகள் எல்லாம் இருக்கின்றன. ஆரம்பத்தில் பாதரசம், ஈயம் போன்ற விஷத்தன்மை வாய்ந்த உலோகங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இந்த விதிமுறைகள் காரணமாக அவை நிறுத்தப்பட்டன. இந்தியாவிலும் இதற்கென விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும் அனைவரும் இதைப் பின்பற்றுகிறார்களா என்பது முக்கியம். இன்றைக்கு சாலையோரமாகக் கடை போட்டுக்கூட, டாட்டூ குத்துகிறார்கள். அந்த அளவுக்கு மலிவாகிவிட்ட சூழலில் இந்த விதிமுறைகளெல்லாம் பின்பற்றப்படுவதில்லை.
டாட்டூ எல்லோருக்கும் ஒரே விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரது உடல்நிலைக்குத் தகுந்தாற்போல் அதன் விளைவுகள் மாறுபடும். டாட்டூ நிறமியை உடல் ஏற்றுக்கொள்ளாது. அந்நியப் பொருள் என்று நினைத்து நோய் எதிர்ப்புச் சக்தி அதற்கு எதிராக வினைபுரியும் வாய்ப்பிருக்கிறது. டாட்டூ குத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஊசிகள் வழியாக பலவித தொற்றுநோய்கள் ஏற்படலாம். சருமத்தில் ஏற்படும் காசநோய், ஹெச்.ஐ.வி, தொழுநோய், ஹெபடைட்டிஸ் பி போன்ற பல பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனவே, டாட்டூ குத்தும் ஊசியை ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாகப் பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
டாட்டூ போடுவது எளிது. அதை நீக்குவது அவ்வளவு எளிதல்ல. லேசரில் நீக்கினாலும் அதிக காலம் எடுக்கும். டாட்டூ போடுவதைக் காட்டிலும் அதை நீக்குவதற்கு கூடுதல் வலியைத் தாங்கிக்கொள்ள வேண்டி வரும். காதலிக்கிறவரின் பெயரை உணர்ச்சி வேகத்தில் நெஞ்சில் டாட்டூ போட்டுக்கொள்கிறார்கள். காதல் முறிந்துவிட்ட பின் அதை அழிக்கப் போராடுகிற பலரைப் பார்க்கிறோம். டாட்டூவை அழிக்க ஓராண்டு வரைகூட ஆகலாம்.
டாட்டூ
லேசர் மூலமாக டாட்டூ நிறமியைத் தகர்த்து எதிர்ப்பு சக்தி செல்கள் மூலம் அதை வெளியே தள்ளுவதுதான் டாட்டூவை அழிக்கும் வழி. ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அந்தந்த ரசாயனங்கள் உடலில் வேதி வினை புரியத்தொடங்குகையில் பெரும் வாதைதான். பச்சை நிறத்துக்கு டைக்ரோமோட், நீல நிறத்துக்கு கோபால்ட் எனப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களில் நிக்கல் சேர்க்கப்படும். டாட்டூ போட்டவுடன் ரியாக்ட் ஆகலாம். இல்லையென்றால் நாளடைவில் வினைபுரியலாம். சிவப்பு நிற டாட்டூ வெயிலில் படும்போது வேதிவினை புரிந்து கடும் எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. கறுப்பு நிறத்துக்கு ஹென்னா போடும்போது உடல் முழுவதும் நெரிகட்டி ஜுரம் வரலாம். சொரியாசிஸ் வந்து மீண்டவர்கள் டாட்டூ போட்டால் மீண்டும் சொரியாசிஸ் வளர வாய்ப்பிருக்கிறது.
ஃபேஷனுக்காக டாட்டூ குத்திக் கொள்கிறவர்கள் அதிகம் என்றாலும், வெண்புள்ளி நோய் இருக்கிறதென்றால் அதை மறைப்பதற்காகவும், விபத்தால் ஏற்படுகிற காயத் தழும்புகளை மறைப்பதற்காகவும் சிலர் டாட்டூ குத்திக்கொள்கிறார்கள்.
டாட்டூ குத்திக் கொள்வது மருத்துவ அறிவியல்பூர்வமாக ஏற்புடையதல்ல. சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வும் இதைத்தான் கூறுகிறது. நிறமிகளில் உள்ள ரசாயனங்கள் டாட்டூ குத்தும்போது மட்டுமன்றி லேசர் மூலம் அதை அழிக்கும்போது கூட வேதிவினை புரிய வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் அவை விஷத்தன்மை கொண்டதாக மாறும் அபாயம் இருக்கிறது. படியில் பயணம் நொடியில் மரணம் என்பதைப் போல் உணர்ச்சி வேகத்திலும், டாட்டூ கலாசாரத்தின் மீதான மோகத்திலும் எடுக்கிற முடிவால் ஒரு பிரச்னையை நாம் நிரந்தரமாக ஏந்திக் கொள்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு அந்த மோகத்தில் இருந்து வெளியே வர வேண்டும்” என்கிறார் வானதி திருநாவுக்கரசு.