மென்ஸ்ட்ருவல் கப் (Menstrual Cup) பயன்பாடு என்பது இயல்பான விஷயமாக மாறிவிட்டது. சானிடரி பேடுகளுக்கு சிறந்த மாற்று இதுதான் என மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
பெரும்பாலான பெண்கள் மென்ஸ்ட்ருவல் கப் பயன்பாட்டிற்கு மாறிவிட்டது நல்ல விஷயம்தான் என்றாலும் அதை சிலருக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் சிக்கல் உள்ளது. அதேபோல் கப் உள்ளே சிக்கிக்கொண்டால் அதை எப்படி எடுப்பது என்பதிலும் தடுமாற்றம் உள்ளது. இதனால் அதை பயன்படுத்துவதிலும் சிலருக்கு பயம், தயக்கம் இருக்கும். ஆனால் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்கிறார் மருத்துவர் தனயா.
இஸ்டாகிராமில் இவர் பகிர்ந்த வீடியோவில் மென்ஸ்ட்ருவல் கப் உள்ளே சிக்கிக்கொண்டால் எப்படி சுலபமாக எடுப்பது என்று டெமோ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் கப் உள்ளே சிக்கிக்கொண்டது எனில் முதலில் பதர வேண்டாம். ரிலாக்ஸாக இருங்கள். பதட்டம், கப்பை வெளியே எடுப்பதில் மேலும் சிரமமாக்கும். எனவே நன்கு மூச்சை இழுத்து விட்டு உங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். அப்போது உங்கள் தசைகள் இலகுவாகும்.
பின் கப்பை வெளியே எடுப்பதற்கு ஏதுவாக கால்களை விரித்தபடி டாய்லெட் சீட்டில் அமரவும். இதனால் கப் எளிதில் பிறப்புறுப்பு கால்வாயிலிருந்து சற்று இறங்கி கீழே வரும்.
இப்போது உங்கள் விரலை உள்ளே விட கப்பின் காம்பு கையில் தட்டுப்படும். அப்போது எவ்வித பதற்றமுமின்றி ரிலாக்ஸாக மெதுவாக கப்பை வெளியே எடுத்துவிடுங்கள்.
கால்களை விரித்து அமர்ந்த நிலையிலும் கப் வெளியே வரவில்லை எனில் பிரசவத்தின்போது குழந்தை வெளியே வர அழுத்தம் கொடுப்பதுபோல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது நிச்சயம் கப் கீழ் நோக்கி நழுவி வரும். அப்போது உங்கள் விரலை உள்ளே விட்டு மெதுவாக இலாவகமாக எடுத்துவிடுங்கள். அவ்வளவுதான் பிரச்சனை தீர்ந்தது.