தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாகப் பெங்களூர் உள்ளிட்ட நகரங்கள் அப்படியே மழைநீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக தக்காளிச் செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. சென்னைக்கு அண்டை மாநிலங்களில் இருந்து தான் தக்காளி வருகிறது.

கனமழை காரணமாகச் சென்னையில் தக்காளி வரத்துக் கணிசமாகக் குறைந்துள்ளது இதன் காரணமாக, தக்காளி விலை கடந்த சில நாட்களாகவே சென்னையில் மளமளவென உயர்ந்து வருகிறது.

சென்னையில் ஒரு கிலோ தக்காளி இப்போது 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தச் சூழலில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் எனக் கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும் ஒரு கிலோ தக்காளி ரூ. 40-42க்கு விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் தக்காளி விலை வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே