வெந்தயம் நல்லதுதான், ஆனா அதிகமாக சாப்பிட்டா இந்த மாதிரி பிரச்சனையும் உண்டாகும்!

அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அது நஞ்சுதான். அந்த வகையில் வெந்தயமும் கூட அப்படித்தான். வெந்தயம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. மூலிகை குணம் கொண்ட வெந்தய விதைகளும் வெந்தய இலைகளும் ஆண்டுக்கணக்காக பயன்படுத்திவருகிறோம். சமையலில் பயன்படுத்தப்படும் இந்த பொருளின் மருத்துவ நன்மைகள் குறித்த விழிப்புணர்வால் அதிக அளவு பயன்படுத்த தொடங்கியிருக்கிறோம். இந்நிலையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை பயன்படுத்தினால் அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கவும் செய்கிறது. அன்றாடம் எடுத்துகொள்ளலாம் என்றாலும் எவ்வளவு எடுத்துகொள்ளலாம், அதிகமானால் என்னமாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்பதையும் அறிந்து கொள்வோம்.
​ஆரோக்கிய குறைபாடு இருக்கும் போது
ஆரோக்கிய குறைபாடு இருக்கும் போது வெந்தயத்தை தனித்து பயன்படுத்துவது நல்லது. அப்படியே பயன்படுத்தினாலும் பாதிப்பில்லாமல் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். வெந்தயம் குளிர்ச்சித்தன்மை கொண்டது என்பதால் உடல் ஆரோக்கிய குறைபாடுஇருக்கும் காலங்களில் இதை எடுத்துகொண்டால் இவை மூச்சுத்திணற பிரச்சனையை உண்டு செய்யும்.
குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை. உணவில் சேர்த்து பயன்படுத்தும் போது பிரச்சனை நேராது. ஆனால் தனித்து சருமத்துக்கு, கூந்தலுக்கு உள்ளுக்கு என்று எடுக்கும் போது இதன் குளுமை உடலில் அதிகரிக்கும். குறிப்பாக மழைக்காலங்களில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கை வைத்திய முறையில் வெந்தயத்துக்கும் பங்குண்டு என்றாலும் தானாக பயன்படுத்த கூடாது

​ஓவ்வாமை குறைபாடு
எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் வெந்தயம் சிலருக்கு மட்டும் ஒவ்வாமையை உண்டு செய்கிறது. வெந்தயத்தை தனித்து அதிகளவு எடுக்கும் போது ஹார்மோன் உணர்திறன் அதிகரிக்கும் சக்தியை உண்டாக்குகிறது. குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். புற்றுநோய், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுப்பவர்கள் வெந்தயத்தை தனித்து எடுக்கும் போது அவர்களது உடலில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். உடலில் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் வெந்தயத்தை எடுத்துகொள்ளலாம். ஆனால் அளவாக எடுத்துகொள்ள வேண்டும். அளவாக எடுத்தால் உடலில் நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக வைக்க உதவுகிறது. அளவு அதிகமானால் கடுமையான ஒவ்வாமையை உண்டாக்கும்.

தலைச்சுற்றல்
நீரிழிவு இருப்பவர்களுக்கு வெந்தயம் அருமருந்தாக இருக்கும் என்று சொல்வதுண்டு. உண்மைதான் அளவாக எடுத்துகொண்டால் இவை எந்த பிரச்சனையும் உண்டு செய்யாது. பெரும்பாலும் நோய்களுக்கு மருந்து எடுக்கும் போது எதிர்மறை விளைவுகளை உண்டாக்காது. ஆனால் மூலிகை குணங்களை கொண்டிருக்கும் இயற்கை மருந்துகளை எடுத்துகொள்பவர்கள் அந்த மருந்து சாப்பிடும் நாட்களில் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும். அந்த மருந்துடன் வெந்தயம் சேரும் போது தலைச்சுற்றல் பிரச்சனை உண்டாகக்கூடும். உணவில் சேர்க்கலாம். ஆனால் தனித்து பயன்படுத்தும் போது இந்த பிரச்சனைகள் உண்டாககூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

வாய்வுக்கோளாறுகள்
வாய்வுக் கோளாறுகள் உடலில் உண்டாக்கும் உபாதை குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை. அதிகப்படியான வாய்வு உடலினுள் இருக்கும் போது அவை மூட்டுகளில் தேங்கி அங்கு வீக்கத்தையும் வலி உபாதையும் உண்டாக்குகின்றன. அதிக அளவு வெந்தயம் எடுத்துகொள்ளும் போது அவை உடலில் வாய்வு அளவை அதிகரிக்க கூடும். உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றூம் சமநிலையில் இருக்க வேண்டும். அதனால் வாய்வு அதிகமாகும் போது பிரச்சனைகள் அதிகரிக்கவே செய்யும். குறிப்பாக வாய்வு கோளாறுகள் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை தனித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் கோளாறு அதிகரித்துவிடும்.

​வேறு என்ன செய்யும்
வெந்தயத்தை அதிகமாக தனித்து எடுத்துகொள்ளும் போது அவை சருமத்தில் வறட்சியை உண்டாக்கும், சரும பராமரிப்புக்கு வெளிப்பூச்சுக்கு வெந்தயம் பயன்படுத்தும் போது அவை சருமத்தை மென்மையாக்கும். ஆனால் உள்ளுக்கு எடுக்கும் போது அதிக வறட்சியை உண்டாக்கும். குளுமை நிறைந்தது என்பதால் தலைவலி பிரச்சனையை உண்டு செய்யும். கொடுக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக எடுத்துகொள்ளும் போது வீக்கம், வயிறு கோளாறுகளை உண்டாக்கும். சிறுநீரக தொற்றூ இருக்கும் போதும் வெந்தயத்தை தனித்து அதிகமாக எடுக்க வேண்டாம்.

​எவ்வளவு சாப்பிடலாம்
ஒவ்வொருவர் உடல்நிலையை பொறுத்து அவர்கள் அன்றாடம் எடுத்துகொள்ள வேண்டிய அளவு தீர்மானிக்கலாம். கொழுப்பு சத்து உடலில் அதிகமாக இருந்தால் அவர்கள் தினசரி 10 முதல் 30 கிராம் வரை வெந்தயத்தை எடுத்துகொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் வெந்தயத்தை எடுத்துகொள்ளும் போது தினமு. 2.5 கிராம் முதல் 15 கிராம் வரை எடுத்துகொள்ளலாம். ஆனால் அவ்வபோது நீரிழிவு பரிசோதனை செய்வதும் நல்லது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உடலில் குளுமை இல்லை யெனில் தினமும் 500 மி.கிராம் வரை எடுக்கலாம். மேற்சொன்னது போல் இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால் வெந்தயத்தை தனித்து எடுப்பதாக இருந்தால் அவசியம் மருத்துவரின் ஆலோசனை தேவை.

அளவாக எடுத்தால் வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகள் முழுமையாக கிடைக்கும் என்பதால் அச்சப்பட வேண்டாம். தேவையான அளவு உரிய முறையில் எடுத்துகொள்ளுங்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே