கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில், மக்களுக்கு வருமானம் இல்லாத நேரத்தில், டாஸ்மாக் கடைகளை திறப்பதன் அவசியம் ஏன்? என்று பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் ஸ்தம்பித்து உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான அவசியம் என்ன?
தமிழகத்தை பொறுத்தவரை வசதியானவர்களை விட வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், நடுத்தர குடும்பத்தினர் மற்றும் கிராமப்புறத்தினர் தான் அதிகமாக உள்ளார்கள்.
பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், தொழிற்சாலைகள் ஏதும் திறக்கப்படாத நிலையில் யாரும் கேட்காத டாஸ்மாக் கடையை திறக்க என்ன அவசியம்.
வருமானமே இல்லாத இந்த நேரத்தில் குடும்ப பெண்கள் இருக்கக்கூடிய பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த திட்டமிடுவார்கள்.
ஆனால் அந்த பணத்தை மது பிரியர்கள் வன்முறை மூலம் பெற்றுக் கொண்டு மதுக்கடைக்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்படும்.
எனவே அரசுக்கு வருவாய் வேண்டும் என்ற காரணத்திற்காக மதுக்கடையை திறக்கக் கூடாது என பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.