எந்த பொதுமேடையிலும் நான் இந்தியில் மொழிபெயர்த்தது இல்லை; கனிமொழி எம்.பி.

இந்தியில் இருந்தோ ஆங்கிலத்தில் இருந்தோ யாருடைய பேச்சையும் தான் மொழிபெயர்த்தது கிடையாது என மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழியிடம், “நீங்கள் இந்தியரா?” என சென்னை விமான நிலையத்தில், பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கேள்வி எழுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து கனிமொழிக்கு இந்தி தெரியும் என்றும், அவர் முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் பேச்சை மொழிபெயர்த்திருக்கிறார் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டனர்.

இந்த நிலையில் புதன்கிழமையன்று டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய கனிமொழி, செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவரிடம் 1989ல் தேவிலாலின் உரையை இந்தியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த கனிமொழி, “நான் இதுவரை யாருக்கும் மொழி பெயர்த்ததே கிடையாது. ஆங்கிலத்தில் இருந்துகூட தமிழில் மொழிபெயர்த்ததில்லை.

இந்தி தெரிந்தால்தான் மொழிபெயர்க்க முடியும். நான் படித்த பள்ளியில் இரண்டு மொழிதான்: ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம்.

இத்தனை ஆண்டுகளாக டெல்லியில் இருந்தபோதும் நான் இந்தி கற்றுக்கொள்ளவேயில்லை. அப்படி நான்தான் செய்தேன் என்று சொன்னால் அதை நிரூபிக்கட்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “எனக்கு இந்தி தெரியுமா, தெரியாதா என்பதைத் தாண்டி ஒருவருக்கு இந்தி தெரிந்தால்தான் அவர்கள் இந்தியர்களாக இருக்க முடியும் என்று சொல்வது எவ்வளவு பெரிய அவமானம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதைப் புரிந்துகொள்ளாமல், எனக்கு இந்தி தெரியுமா, நான் மொழிபெயர்த்தேனா? என்பது விவாதமில்லை” என்றும் கனிமொழி கூறினார்.

மேலும், தனக்கு ஏற்பட்ட அவமதிப்பை மத்திய அமைச்சராக இருந்த ப. சிதம்பரம், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் பகிர்ந்துகொள்கிறார்கள் என்றும் கனிமொழி சுட்டிக்காட்டினார்.

“இந்தி தெரியுமா, தெரியாதா என்பது விவாதமல்ல என்றும் இந்தி தெரிந்தால்தான், ஒரு மதத்தில் இருந்தால்தான், ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றினால்தான், ஒரு கருத்தியலை பின்பற்றினால்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதைத்தான் கண்டிக்க வேண்டும்” என்றும் கனிமொழி வலியுறுத்தினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே