ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ அத்துமீறலால் பலியான தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை :

இந்திய ராணுவம், 17வது மெட்ராஸ் படைப்பிரிவில் அவில்தாராக பணி புரிந்து வந்த, சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், வெத்தலைக்காரன் காடு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன், ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிரியின் போர் தாக்குதலால் 4.6.2020 அன்று வீர மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகனின் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

வீரமரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும்; அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 1070 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே