கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் அறிக்கை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களை மூட முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்பு பணிகளில் மற்றும் தூய்மை பணிகளை போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, போலீசார், போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும், துவக்க பள்ளிகளுக்கும்( 1 முதல் 5ம் வகுப்பு வரை) 31.03.2020 வரை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மூடல் எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் 31.03.2020 வரை மூடவும் உத்தரவிட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட மாநில பேரிடர் நிதியில் இருந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.30 கோடி, போக்குவரத்து துறைக்கு ரூ. 5 கோடி, சென்னை மாநகராட்சிக்கு ரூ.4 கோடி, நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.6 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.5 கோடி, பேரூராட்சி இயக்குநரகத்திற்கு ரூ.2 கோடி, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.2 கோடி, அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம், மாவட்ட கலெக்டர்களுக்கு ரூ.2.5 கோடி எ மொத்தம் ரூ.60 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்கவும் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வருகை புரியும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை, மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கையினை மாவட்ட கலெக்டர்கள் வருவாய் நிர்வாக ஆணையருக்கு தினமும் அனுப்ப வேண்டும்.

அந்த அறிக்கையை அவர் முதல்வர் மற்றும் அமைச்சருக்கு தினமும் அளிக்க வேண்டும்.

மக்களுக்கு அறிவுரை :

பொது மக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிகள அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்.

கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

பொது மக்கள் அனைவரும், தனி நபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போது அவ்வப்போதும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

கைகளை கழுவுங்க கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம். விடுமுறை நாட்களில், குழந்தைகள் குழுவாக விளையாடாதவாறு பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

வீட்டிற்குள் நுழைந்தவுடனும் அவ்வபோதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே