சென்னை: சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான  ஓய்வூதியம் ரூ.16,000 லிருந்து ரூ.17,000ஆக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, கோட்டை கொத்தளத்தில் அவர் இன்று தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் அவர் உரையாற்றியதாவது:

4வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன். நாட்டு  மக்கள் அனைவருக்கும் சுதந்திர தினம் வாழ்த்துகள். மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன். அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக்  கொண்டே இருப்பேன.

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான  ஓய்வூதியம் ரூ.16,000லிருந்து ரூ.17,000-ஆக உயர்த்தப்படும். அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம்  ரூ.8,000லிருந்து ரூ.8,500ஆக அதிகரிக்கப்படும்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக அரசானது, பொதுமக்களின்  ஒத்துழைப்புடன் வெல்லும். குடிசைகளில்லா தமிழகம் உருவாக்க ரூ 7,500 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. விரைவில் மணி மண்டபம் திறக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 7.5% ஒதுக்கீடு வழங்க சட்டம்  பிறப்பிக்கப்படும்.

 ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ 300 கோடியில் திட்டம் கொண்டு வரப்படும். காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறையில் நாட்டிலேயே தமிழகம் தான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று பேசினார்.

AKR

Having 20 years experience in the field of Journalism in various positions.

AKR has 46 posts and counting. See all posts by AKR

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே