காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவை சீண்டும் வகையில் வெளியிட்ட ட்விட்டர் பதிவை, தமிழக பாஜக தற்போது நீக்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, தாடியுடன் தோற்றம் அளிக்கும் காட்சி அண்மையில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவரது தோற்றம் வேதனை தருவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு அமேசான் மூலம் ஆன்லைனில் ஷேவிங் செய்வதற்கு, ரேசர் ஒன்றை பார்சல் அனுப்பி வைப்பதாக கருத்து பதிவிடப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த ட்விட்டர் பதிவை நீக்கியது தமிழக பாஜக.
ட்விட்டரில் பதிவிட்டுவிட்டு, எதிர்ப்பு வருவதை அடுத்து கருத்தை நீக்குவது தமிழக பாஜகவுக்கு முதல்முறை அல்ல. கடந்த மாதம் பெரியார் நினைவு நாளின் போது, பெரியார் குறித்து சர்ச்சக்குரிய கருத்தை பதிவிட்டு பின்னர் நீக்கியது தமிழக பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.