அண்ணா பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது : அமைச்சர் ஜெயக்குமார்

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும் பெயரில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு அந்தஸ்து வழங்கப்பட்டால் அது சீர்மிகு அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரிலும், பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க வழக்கம் போல் அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரிலும் இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டால் இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் மாறுமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எந்த காலத்திலும் அண்ணா பல்கலைக்கழக பெயர் மாறாது என விளக்கமளித்தார்.

இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து விரிவாக கலந்தாலோசித்த பிறகு உயர்மட்டக் குழு தனியாக ஒரு துணைக் குழுவை அமைத்துள்ளது என்றும்;

பல்கலைக்கழக மானியக்குழு அளிக்கும் நிதியை எப்படி பெறுவது, எந்த வகையில் நிதி கிடைக்கும் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மற்ற பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து இந்த துணைக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே