சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் முடிவு

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.

ஆனால், மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை நடைபெறும் என்று சபாநாயகர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோரிய திமுகவின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காத நிலையில், திமுகவே சட்டப்பேரவை கூட்டத்தொடரை முழுவதும் புறக்கணிப்பதாக இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக கொறடா சக்கரபாணி செய்தியாளர் சந்திப்பின்போது, கரோனாவால் தமிழகத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 8,900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

கரோனா பரவி வரும் நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பல முறை சட்டப்பேரவையில் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், அரசு இதுகுறித்து முடிவெடுக்காத நிலையில், கரோனா முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணிக்கிறது’ என்று தெரிவித்தார்.

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய திமுக கூட்டணி கட்சிகளும் சட்டப்பேரவையை புறக்கணிப்பதாக தகவல் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே